'இலவசம்' வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் 'கிடுக்குப்பிடி'

இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என, தமிழக அரசியல் வரலாற்றில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி வரும் தேர்தல் காலங்களிலும், இதுபோன்ற இலவச திட்ட வாக்குறுதிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில், இலவசங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளிப்பதை, அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்.

Update: 2022-10-05 04:07 GMT

இலவசத்திட்ட வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீங்க? - தேர்தல் கமிஷன் கேள்வியால், அரசியல் கட்சிகள் ‘ஷாக்’ 

தேர்தல் பிரச்சார நேரத்தில், வாக்காளர்களிடம் இருந்து கணிசமான ஓட்டுக்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட இலவசங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அரசியல் கட்சிகள் அள்ளி வீசுகின்றன. அதில் ஆட்சிக்கு வரும் கட்சிகள், எந்த அடிப்படையில், நிதி ஆதாரங்களை கொண்டு வாக்குறுதியாக தந்த இலவச திட்டங்களை நிறைவேற்றும் என்பதற்கான விளக்கங்களை அளிக்குமாறு,  அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல்வாதிகள், தங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கி தேர்தல் காலத்தில், மக்களிடம் பிரச்சாரம் செய்து ஓட்டுகளை பெற்றது ஒரு காலம். ஆனால், நாளடைவில் அந்த நிலை மாறி, ஓட்டு வாங்குவதற்காக கரன்ஸி தாள்களை அரசியல் கட்சிகள் வினியோகிக்க துவங்கியதால், 'லட்டுக்கு துட்டு' என்பது போல, 'துட்டுக்கு ஓட்டு' என்ற அவல நிலை உருவானது. மூக்குத்தி, கொலுசு, குடம், புடவை என, தேர்தல் பரிசு பொருட்கள் வினியோகமும் ஜோராக நடக்கிறது. தேர்தல் வேளைகளில், இதுபோன்ற முறைகேடுகளை  தடுக்க, தேர்தல் தனிப்படை அதிகாரிகள் குழு, அமைக்கப்படுகிறது. எனினும், முறைகேடுகள் தொடர்கிறது. இந்நிலையில், 'இலவசம்' என்ற ஆயுதத்தை நம்பி, தேர்தல் களத்தில் இறங்கும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன.

இந்தியாவில், தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை ஏராளமான வாக்குறுதிகளை முன்வைத்தே, அரசியல் கட்சிகள் களத்தில் தைரியமாக இறங்குகின்றன. குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில், ஏதாவது சில கவர்ச்சிக்கரமான இலவசத் திட்டங்களை கட்டாயம் அறிவிக்கின்றன. இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை முன்னேற்றம் அடையச் செய்யும் நடவடிக்கையாக சில அரசியல் கட்சிகள் கையாண்டாலும், வசதி படைத்தவர்களும் பயன்பெறவே செய்கின்றனர். 

மக்களை 'இலவசங்கள்' சோம்பேறிகளாக மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், வெறும் விமர்சனமாக மட்டுமின்றி, வழக்கு விசாரணையாக மாறியிருக்கிறது இலவசங்கள் விவகாரம். அதாவது, தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்று கூறி மூன்று பேர் அடங்கிய அமர்விற்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இத்தகைய சூழலில், இந்திய தேர்தல் கமிஷன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எவ்வாறு என்பது குறித்து உண்மை தகவலை வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து போதிய தகவல்கள் விளக்கப்படவில்லை. இதனால் நிதி நிலைத்தன்மை குறித்த தெளிவின்மை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின் போது அளிக்கப்படும் இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை ,வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Similar News