நேஷனல் ஹெரால்டு விவகார வழக்கு சோனியா, ராகுலிடம் மீண்டும் விசாரணை அமலாக்கப்பிரிவு திடீர் முடிவு

யங் இந்தியா , நேஷனல் ஹெரால்டு வழக்கில் அதிரடி திருப்பமாக முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. இதனால் சோனியா, ராகுலிடம்மீண்டும் விசாரணை நடக்கும் என அறிவித்துள்ளது.

Update: 2022-08-06 14:18 GMT

காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி. 

புதுடில்லி

யங் இந்தியா, நேஷனல் ஹெரால்டு தொடர்பான விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சோனியா, ராகுலிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜெனரலிடம் இருந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் ஷேர்களை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து வாக்குமூலத்தினை பெற்றது.

நேஷனல் ஹெரால்டு உட்பட அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்திற்கு சொந்தமான முக்கிய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஹவாலா பண பரிமாற்றம் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் கொல்கத்தா , மும்பையைச் சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர்களும் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையின்போது சோனியாவும், ராகுலும் தெரிவிக்கும்போது யங்இந்தியா நிறுவனத்திடமிருந்து எந்தவித நிதியையும் பெறவில்லை என்றும், நிதி தொடர்பான விஷயங்களை மறைந்த மோதிலால் வோராதான் மேற்கொண்டார் என்றும் தெரிவித்தனர். ஆனால் தற்போது ஹவாலா பண பரிமாற்றத்திற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால் சோனியா, ராகுல் இருவரிடமும் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை துவக்க முடிவு செய்துள்ளது. மேலும் அவர்கள் ஏற்கனவே அளித்த வாக்குமூலங்களையும்  பரிசீலித்து வருகிறது.

 யங் இந்தியா நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ள சோனியா,ராகுலிடம் மீண்டும் விசாரணையை நடத்த அமலாக்கப்பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜின கார்கேவிடமும் அமலாக்கத்துறையானது மீண்டும் விசாரணையை நடத்தமுடிவு செய்துள்ளதால் இவ்விவகாரத்தில் மேலும் அதிரடி நடவடிக்கைகளை அமலாக்கத்துறை  மேற்கொள்ளும்  என டில்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News