'மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழுங்க' - கமல் மகள் சொல்றதை கேளுங்க...!

‘சினிமா வாழ்க்கை வேறு; நிஜ வாழ்க்கையில் என் மனதுக்கு பிடித்தது போல் மட்டும்தான் வாழ்வேன்,’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-07 07:39 GMT

உலகநாயகன் கமல் மகள் நடிகை ஸ்ருதிஹாசன்.

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இளைய மகள் அக்‌ஷரா. அப்பாவை போலவே, மூத்த மகளான ஸ்ருதி ஹாசனும் கருத்து சுதந்திரம் மிக்கவர். முற்போக்கு சிந்தனைகளை கொண்டவர். 35 வயதுகளை கடந்த நிலையில், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நல்ல பாடகி. 'பாப் சிங்கர்' ஆக புகழ் பெறவே, இளம் வயதில் இருந்தே விரும்பியவர். பல பாடல்களை பாடியுள்ளார்.  சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.


தமிழில், சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்தில் ஸ்ருதி அறிமுகமானார். விஷால் உடன் 'பூஜை', சூர்யாவுடன் 'சிங்கம் 3' அஜித் உடன் 'வேதாளம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

அதற்கு முன்னர் 2009 ல் வெளியான 'லக்' என்ற படத்தில் நடித்த இவர், அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்பே, குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.  2000 வெளியான இவரது தந்தை கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகியோர் நடித்த 'ஹே ராம்'  படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


சிறு வயது முதலே தாம் ஒரு 'பாப் சிங்கர்' ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி, பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் 1992 வெளியான 'தேவர் மகன்' படத்தில் ஒரு பாடலை  பாடியுள்ளார் ஸ்ருதி. தற்போது இவரது தந்தை கமல் எடுத்து வரும் படமான 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். 

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்திலும், சிரஞ்சீவியுடன் 'வால்டேர் வீரையா' ஆகிய படங்களில், தற்போது நடித்து முடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் 'சலார்' படப்பிடிப்பும் இறுதிகட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வெளிப்படையான சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.


சினிமாவில் எத்தனை உடைகளை மாற்றினாலும், எந்த விதமான உடை அணிந்தாலும், எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில், என் மனதுக்கு பிடித்தது போல மட்டும்தான் வாழ்வேன். வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களுக்கு பிடித்தது போல வாழ்வதுதான்.

அனைவருக்கும் பிடித்தது போல உடை அணிவது, பேசுவது, நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான வேலை. ஏனென்றால், அடுத்தவர்கள் நம்மை எப்படி ஆமோதிக்கிறார்கள் என்பது அடிக்கடி மாறிவிடும். அது மிகவும் ஆபத்தானது. அதனால் தான் அனைவரையும் திருப்தி படுத்தவேண்டும் என்று நினைக்காமல், மனதுக்கு சந்தோஷம் எதுவோ அப்படியே இருந்து கொள்வது, நடந்து கொள்வது மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும், அப்படி வாழ்வதற்குதான் விரும்புவேன்" என்று கூறி இருக்கிறார்.

'வாழ்வது ஒருமுறை; இந்த வாழ்க்கை ஒரு அரிய வாய்ப்பு. மற்றவர்களுக்காக, தன் உணர்வுகளை மதிக்காமல், அடிமைப்பட்டும், அடங்கியும் நடப்பது சரியல்ல. மனதுக்கு பிடித்தது போல வாழ வேண்டும்,' என்பதை 'பளிச்' என கூறி அசத்தி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். 

Similar News