மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்  நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை

வந்தே பாரத் ரயில் (கோப்பு படம்).

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை - பெங்களூரு புதிய வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒளிபரப்புத்தறை இணை அமைச்சர் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

மத்திய ரயில்வேத்துறை சார்பில், மதுரையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 20ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில், பாரத பிரதமர் மோடி கலந்துகொண்டு வந்தே பாரத் ரயிலை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். இந்த ரயில் மதுரையில் இருந்து கிளம்பி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூர் செல்கிறது. மறு மார்க்கமாக இதே வழியில் திரும்பி வருகிறது. மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய 3 இடங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் இல்லை என்று தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் கல்வி, தொழில் துறைகளில் இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள லாரி மற்றும் கோழித்தொழிலில் ஈடுபடுவோர் அடிக்கடி பெங்களூரு மற்றும் மதுரை செல்லவேண்டி உள்ளது. மேலும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலைக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர். எனவே குறிப்பாக நாமக்கல்லில் வந்தே பாரத் ரயிலுக்கு நிறுத்தம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மத்திய இணை அமைச்சர் முருகன், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். எனவே, இந்த ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்பதை ரயில்வேத்துறை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story