விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்..! சிறுவனின் நிலை என்ன?
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனின் கைகளில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் மக்களைப் பாருங்கள் என விஜய் கூறியுள்ள நிலையிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தனது 50 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள். சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் மாவட்டங்கள் தோறும் விழாவாக எடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பிறந்த நாள் விழாவில் சாகசம் செய்ய முயன்ற சிறுவனுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சென்னை அருகே நீலாங்கரை பகுதியில் விஜய் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, காலை முதலே விழா நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில் சிறுவன் சாகச நிகழ்வில் ஈடுபட, கையில் தீயைப் பற்றவைத்துக் கொண்டு ஓட்டை உடைக்கும் கலையில் ஈடுபட்டான். அப்போது அவன் கையில் தீப் பற்றி மளமளவென எரிந்தது. அவன் பதற்றமடைந்து கையை உதற, தீ வேகமாக பரவத் தொடங்கியது.
ஓடுகளிலும் அந்த தீ பற்றி எரிய ,ஒரு நிமிடம் அங்குள்ள அனைவரும் பதற்றமடையத் தொடங்கினர். உடனடியைக அங்கிருக்கும் நபர்கள் ஓடிச் சென்று தீயை அணைக்க உதவி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கு கேனில் இருந்த பெட்ரோலை மீண்டும் எடுத்து கையில் ஊற்ற தீ முன்பைவிட வேகமாக எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட மற்றவர்கள் அவசர அவசரமாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். துரித கதியில் செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நொடிகளில் ஏற்பட்ட தீ மீண்டும் மளமளவென பற்றி எரிந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. தீயை அணைக்கும் முன் ஏற்பாடு கூட அந்த இடத்தில் இல்லை என பலரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்வில் தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட இல்லை என்பது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தற்போது அரசியல் கட்சியை மும்முரமாக களத்தில் இறக்கி விட ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், இப்படி ஒரு விபரீதம் அவரது பிறந்த நாள் விழாவிலேயே ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டினாலும் அரசியலில் அவர் இன்னும் முதல் அடியையே எடுத்து வைக்கவில்லை. அடுத்த 2026 ஆம் ஆண்டு நடைபெறும் முதல் தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்துக்கான முதல் தேர்தல். அந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க களம் தயாராகி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விசயங்களில் குரல் கொடுத்த விஜய், தனது பிறந்த நாளை பெரிய அளவில் யாரும் கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தார். தனது ரசிகர்களுக்கு கொடுத்துள்ள இந்த உத்தரவில் அவர் கடுமையாக மக்களுக்கு உழைக்க அறிவுறுத்தியிருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் இப்படி செயல்களில் ஈடுபட்டிருப்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. கட்சியின் பெயரைக் கெடுத்துவிடக் கூடாது என்று அவர் வருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu