அதிரடியைத் தொடங்கிய ராகுல்... 15 நாளில் 10 பிரச்னைகளை அடுக்கி குற்றச்சாட்டு!
மோடி அரசின் மூன்றாவது முறை ஆட்சி தொடங்கிய முதல் 15 நாட்களில் ஏற்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார். இதனால் தேசிய அரசியலில் பெரிய கவனம் ஏற்பட்டுள்ளது. NEET-UG 2024 வினாத்தாள் கசிவு, வட இந்தியாவில் வெப்பத்தால் ஏற்பட்ட இறப்புகள், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகிய ராகுல்காந்தி, "உளவியல் ரீதியாக பின்தங்கிய நிலையில், நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்" என்று குற்றம் சாட்டினார். தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், அவர் உளவியல் ரீதியாக கொஞ்சம் பின்தங்கி இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ராகுல் காந்தி பட்டியலிட்ட விவகாரங்களில், “பயங்கரமான ரயில் விபத்து, காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள், ரயில்களில் பயணிகளின் அவலநிலை, NEET ஊழல், NEET PG ரத்து செய்யப்பட்டது, UGC NET வினாத்தாள் கசிவு, பால், பருப்பு மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தது, காட்டுத் தீ தண்ணீர் நெருக்கடி மற்றும் வெப்ப அலையின் போது ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள் போன்றவை அடங்கும்.
ராகுல் காந்தி தனது ட்வீட்டில், “இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சிகள் அதன் அழுத்தத்தைத் தொடரும், மக்களின் குரலை எழுப்பும், மேலும் பிரதமரை பொறுப்பேற்காமல் தப்பிக்க அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்துகொண்டு அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது போன்ற தாக்குதல்களை எதிர்கட்சியான இந்தியா கூட்டணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் கடுமையாக தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் சாசன நகலை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 1975-ல் விதிக்கப்பட்ட அவசரநிலை குறித்து காங்கிரஸ் மீது மறைமுகமாகத் தாக்கி, "அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்தபோது ஜனநாயகத்தின் மீதான கறை" என்று கூறினார்.
"இன்று ஜூன் 25. இந்திய ஜனநாயகத்தின் மீது போடப்பட்ட கறையின் 50 ஆண்டுகளை ஜூன் 25 குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிந்ததை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu