Tiruvannamalai Lodge Rental Hike-திருவண்ணாமலை விடுதி கட்டணம் உயர்வு : கலெக்டர் எச்சரிக்கை..!

Tiruvannamalai Lodge Rental Hike தீபத் திருவிழாவை முன்னிட்டு விடுதி கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தியதால் உரிமையாளர்களை நேரில் வரவழைத்துகூட்டம் நடத்தி பின் எச்சரித்தார்.

Update: 2023-11-15 06:20 GMT

விடுதி உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ் பி ஆகியோர்  தலைமை வகித்தனர். 

Tiruvannamalai Lodge Rental Hike

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தங்கும் விடுதி கட்டணங்கள் 10  மடங்கு வரை உயர்ந்திருக்கிறது இதையடுத்து விடுதி உரிமையாளர்களை கலெக்டர் நேரில் அழைத்து எச்சரித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் , தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார்.

10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.

இந்த விடுதிகளில் சாதாரண நாட்களில் அறைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப ரூ.1000 முதல் ரூ.3000 வரை வாடகை வசூலிக்கப்படும். இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து விடுகின்றனர். தற்போது தீபத்திருவிழா நெருங்கி விட்டதால் விடுதிகளில் அறைகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தங்கும் அறைகளுக்கு கடும்போட்டி நிலவுவதால் வாடகையும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக விடுதிகள் மீது பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

மாவட்ட கலெக்டர் முருகேஷ் அவசர ஆலோசனை

இந்நிலையில் தங்கும் விடுதி, ஹோட்டல்கள், லாட்ஜ் உரிமையாளர்களுடன், மாவட்ட கலெக்டர் முருகேஷ் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ஹோட்டல் உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், பெரும்பாலான லாட்ஜ் உரிமையாளர்கள், லாட்ஜ் மேலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ் அவர்கள்,  தீபத் திருவிழாவிற்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வரப்பெற்ற புகார்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள புகார்கள் குறித்தும் விடுதி உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு சாதாரண நாட்களை விட அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் விடுதிகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் சரியான கட்டண விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தரமான உணவுகளை வழங்க வேண்டும், பக்தர்களுக்கு நல்ல சேவை வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

இந்த அவசர கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோட்டாட்சியர் மந்தாகினி, நகர ஆணையர் தட்சிணாமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News