திருவண்ணாமலையில் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு... க்ரைம் செய்திகள்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Update: 2022-12-27 13:37 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு:

திருவண்ணாமலை வேல்நகர் 3 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் இணைந்து சேலத்தில் இருந்து கட்டப் பை வாங்கி வந்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 24 ஆம் தேதி மூர்த்தியும், அவரது மனைவியும் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தனர்.

அதிகாலை வீடு திரும்பிய அவர்கள் அசதியில் படுத்து தூங்கி விட்டனர். காலையில் அவர்கள் கொண்டு வந்த பணத்தை பீரோவில் வைப்பதற்காக சென்ற போது பீரோவின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 20 பவுன் நகைகள், ரூ. 4 லட்சம் ரொக்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் திருவண்ணாமலை டவுன் போலீஸில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. கிருட்டு குறித்து துப்பு துலக்குவதற்காக கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ மற்றும் கதவில் பதிவாகியிருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

சாராயம் விற்ற 2 பேர் கைது:

திருவண்ணாமலை ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி மேற்பார்வையில், தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி தலைமையில் தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட போலீஸார் தானிப்பாடி பகுதியில் சாராய விற்பனை தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெட்டியார்பாளையம் கிராமத்தில் வேலு மற்றும் சிவலிங்கம் மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து 110 லிட்டர் சாராயத்தினை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது:

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை கிழக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ,அவர் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருநது 1.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News