மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்- ஆட்சியர் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-04-18 01:02 GMT

கலெக்டர் முருகேஷ் 

இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் வயது வரம்பின்றி தனித்தனியாக நடைபெறும். இதில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியவர்களை ஊக்குவிக்கும் வகையில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிபந்து, கபடி போன்றவை குழு போட்டிகளாகவும், ஓட்டம், குண்டு எறிதல், நின்ற இடத்தில் தாண்டுதல், சக்கர நாற்காலி போன்றவை தடகள போட்டிகளாகவும் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை நகலினை கட்டாயமாக போட்டிகள் நடக்கும் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மேலும் கூடுதல் விவரங்களை பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News