திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவண்ணாமலை பகுதியில் ஒரேநாளில் 3 வீடுகளில் 11 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-20 11:31 GMT

பைல்படம்.

திருவண்ணாமலை பகுதியில் ஒரேநாளில் 3 வீடுகளில் 11 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி சரண்யா, தனியார் பள்ளி ஆசிரியை நேற்று  வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சரண்யா பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 கிராம் தங்க நகைகள் மற்றும் 356 ஆயிரம் திருட்டு-போனது தெரியவந்தது. ஆனால் வீட்டின் பூட்டு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சரண்யா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சாவியை பயன்படுத்தி வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்ற மர்மநபர்கள், பீரோவை உடைத்து நகைகளை திருடிக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேதுபதி மனைவி ராணி (64). இவர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான மாத்திரையை  சாப்பிட்டு வீட்டு சோபாவில் பகலில் படுத்திருந்தார். சோர்வு அதிகரித்து மயங்கியதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நுழைந்த மர்மநபர்கள் மூதாட்டி ராணி அணிந்திருந்த 5 சவரன் தாலி சரடு மற்றும் 3 சவரன் செயின் ஆகியவற்றை அறுத்து கொண்டு தப்பிச்சென்றனர். பின்னர், வீட்டுக்கு வந்த அவரது கணவர் சேதுபதி, மனைவி மயங்கிய நிலையில் இருப்பதையும் நகைகள் திருடுப்போனதும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

திருவண்ணாமலை அடுத்த பவித்திரத்தை சேர்ந்தவர் கணேஷ் (38), சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஆசைத் தம்பி, உத்திராம்பாள் ஆகியோர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே காற்றோட்டமாக படுத்திருந்தனர். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, 100 கிராம் வெள்ளி மற்றும் 733 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News