மாணவிகள் விடுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு

Tahsildar Office -திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாணவிகள் விடுதியில், தாசில்தார் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-10 01:21 GMT

மாணவியர் விடுதியில் தாசில்தார் ஆய்வு 

Tahsildar Office -திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், கெட்டுப் போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், மாணவர்கள் மாணவியர்கள் விடுதிகளில் உணவின் தரத்தை பரிசோதனை செய்ய, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மாணவர்கள் மாணவியர்கள் விடுதிகளில் உணவின் தரம் மற்றும் பதிவேடுகளை, மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், திருவண்ணாமலை தாலுாகா அலுவலக வளாகத்தில் தனித்தனியாக உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவிகளின் விடுதிகளை நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், விடுதியில் வார்டன் இல்லாமல் இருந்தார். உடனடியாக அங்குள்ள சமையல்காரர் மூலம் வார்டனை விடுதிக்கு வரவழைத்து, விளக்கம் கேட்டார். தொடர்ந்து சமையலறையை ஆய்வு செய்தார். 'தினமும் எவ்வாறு உணவு வழங்கப்படுகிறது' என்று தாசில்தார், மாணவிகளிடம் கேட்டறிந்தார். மாணவிகளுக்கு தரமான முறையில் சுத்தமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும், மாணவிகளுக்கு, பாதுகாவலர்கள் தினமும் விடுதியில் இருக்க வேண்டும்  என, வார்டனுக்கு உத்தரவிட்டார்.   பின்பு விடுதி பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில், ஆய்வு செய்த போது விடுதியில் வார்டன் மற்றும் சமையலர் இல்லாதது தெரியவந்தது. வெளிநபர் ஒருவர் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார் . தாசில்தார் அவரிடம், 'நீங்கள் யார்' என்று கேட்டதும், அவர் 'துப்புரவு பணியாளர்' என்று கூறினார். இதையடுத்து, விடுதி வார்டன் மற்றும் சமையல்காரர்கள் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் வெளியில் சென்றதற்கான, விளக்கம் கேட்கப்பட்டது. 'அந்நிய நபரை விடுதியில் விட்டு விட்டு நீங்கள் எப்படி வெளியே செல்லலாம்?,' என்று கேள்வி எழுப்பினார்.

'அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது வார்டன், சமையலர் பணியில் இல்லை என்றால், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை கடிதம் அனுப்பப்படும்' என்று, அவர்களை தாசில்தார் எச்சரித்தார்.' அந்நிய நபர்கள் சமையல் செய்ய அனுமதிக்க கூடாது' என்றும் அவர் தெரிவித்தார். பின்பு பதிவேட்டினை சரிபார்த்த தாசில்தார், 'மாணவர்களிடம் உணவு முறையாக வழங்கப்படுகிறதா?' என கேட்டறிந்தார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால், 17 மாணவிகள் மட்டும் தங்கி இருந்தனர் .  சமையல் அறையில் மாணவிகளுக்கு வழங்க முட்டை குருமா செய்யப்பட்டிருந்தது. அதில் 14 முட்டை மட்டுமே இருந்தது .  மூன்று முட்டைகள் குறைவாக இருந்தது  . அப்போது சமையலர் முட்டை சாப்பிடாத மாணவிகளுக்கு, வாழைப்பழம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

உடனடியாக தாசில்தார்,  வாழைப்பழத்தை காட்டுமாறு கூறினார். பல இடங்களில் சமையலர், வாழைப்பழத்தை தேடியும் கிடைக்கவில்லை. 'அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது, பட்டியல்படி மாணவிகளுக்கு உணவு முறைகள் ஒழுங்காக வழங்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்', என தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News