திருவண்ணாமலையில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

திருவண்ணாமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் கவலை

Update: 2022-04-12 12:06 GMT

பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

திருவண்ணாமலையில் அரசு பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிப்பதற்காக திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் அரசு பேருந்துகளில் வருகை தருகின்றனர்.

இவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய இடம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி வாகனங்களில் சென்று விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளை நம்பிய வருவதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

காலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ மாணவிகள் ஏற முடியாமல் தவிக்கின்றனர். மாணவிகள் முன்னுரிமை அடிப்படையில் பேருந்துக்குள் சென்றுவிடுகின்றனர். ஆனால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கின்றனர். படியில் பயணம் நொடியில் மரணம் என்று எச்சரிக்கை வாசகம் பெயரளவில் எழுதப்பட்டுள்ளது.

பேருந்தின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கால்களை வைக்க இடமில்லாமல் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும் போதும் இறங்கி ஏறுகின்றனர். இந்த பயணம் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கிறது.

சமீபத்தில் ஒரு மாணவன் பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு இலவச பயணம் உள்பட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்த போதும் மாணவ- மாணவிகளுக்கு தனி பேருந்து வசதி ஏற்படுத்தி தராமல் இருப்பது மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

தினமும் பள்ளி செல்லும் மாணவன் நல்லபடியாக திரும்பி வருவானா? என்று பெற்றோர்கள் தவிக்கும் சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News