மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று: பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

வந்தவாசி, ஆரணி சாலையில் மாண்டஸ் புயல் காரணமாக வேரோடு மரம் சாய்ந்ததால், 3 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.

Update: 2022-12-10 00:58 GMT

வேரோடு சாய்ந்து  விழுந்த மரம்.

மாண்டஸ் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது.

போளூரை அடுத்துள்ள சந்தவாசல் ஊராட்சி, புஷ்பகிரி கிராமத்தில் விவசாயிகள் செவ்வாழை, மொந்தை, பூவன், ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் வீசிய புயல் காற்றால் பல ஏக்கரிலான வாழைகள் முறிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், போளூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், உதவி வேளாண் அலுவலா் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் ரேணு ஆகியோா் சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் லோகேஷ் கூறியதாவது:

படவேடு, சந்தவாசல், காளசமுத்திரம், அனந்தபுரம், கல்குப்பம், வாழியூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனா். எனவே, போளூா் வட்டாரத்தில் சேதமடைந்த வாழைகளை 2 அல்லது 3 நாள்களில் ஆய்வு செய்த பின்னரே எவ்வள ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூற முடியும் என்றாா்.

மாண்டஸ் புயல் காரணமாக, வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதனால், வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள மர விற்பனையகத்தையொட்டி சாலையோரமிருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. அப்போது, அந்தப் பகுதியிலிருந்த 3 மின் கம்பங்களும் சேதமடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் சாய்ந்தன. இதன் காரணமாக, அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலை, தீயணைப்பு, மின் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், வந்தவாசி தெற்கு போலீஸாா் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சனிக்கிழமையும் (டிசம்பா் 10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

Tags:    

Similar News