மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது

Update: 2023-05-12 01:26 GMT

மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர் முருகேஷ்.

பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய 5-ம் ஒரு சேர வளர வேண்டும் என்ற தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், ஜோதி, மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணை பொறியியல் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களாகும். காலை உணவு திட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கடின உழைப்பு, விடா முயற்சியும் தான் வாழ்க்கையை முடிவு செய்யும். கடின உழைப்பிற்கு குறுக்கு பாதை என்பது கிடையாது. கடினமாக உழைத்தால் தான் வாழ்க்கையில் முக்கிய இடத்தை அடைய முடியும். கல்வி என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. மேலும் மாணவ, மாணவிகள் கல்வி மட்டுமின்றி கூடுதலாக தனித்திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

இந்த பேச்சு போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 20 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடைபெற்றன . பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், அருணை பொறியியல் கல்லூரி பதிவாளர் சத்தியசீலன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News