கொரோனா: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள்வர வேண்டாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-09-17 14:32 GMT

கோப்பு படம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேகரர் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு, 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் நடக்கும். இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு, வரும்  31.10.2021 காலை 06.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 20.9.21 முதல் 21.9.21 வரை திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.  கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News