திருவண்ணாமலையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலைக்கு வந்த வ.உ.சி.யின் புகைப்பட கண்காட்சி வாகனத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

Update: 2022-03-22 06:27 GMT

திருவண்ணாமலைக்கு வந்த வ.உ.சி.யி்ன் புகைப்பட கண்காட்சி வாகனத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி வாகனம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டுப் பயன்பெறும் வகையில் புகைப்பட கண்காட்சி வாகனம் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தது. கண்காட்சி வாகனத்தை திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். அப்போது மாணவி ஒருவர் வ.உ.சி.யின் வேடம் அணிந்து இருந்தார்.

அந்த வாகனத்தில்  கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறும்படங்களும் திரையிடப்படவுள்ளது. வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், பெரியகோளாப்பாடி, பாய்ச்சல், விண்ணவனூர், இறையூர், அம்மாப்பாளையம், கொட்டகுளம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட 15 பள்ளிகளில் இந்த காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் சங்க தலைவர் டி.வி.எம்.நேரு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News