அடையாள அட்டை புதுப்பிக்க குவிந்த மாற்றுத்திறனாளிகள்

Disabled People- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-23 00:58 GMT

அடையாள அட்டை புதுப்பிக்க குவிந்த மாற்றுத்திறனாளிகள்.










Disabled People- திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் அடையாள அட்டையை புதுப்பிக்க நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதற்காகவும், அடையாள அட்டையை புதுப்பிக்கவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சதவீதத்தின் அடிப்படையில், அரசு உதவிகள், பயண சலுகை, உதவி உபகரணங்கள் மற்றும் நூறு நாள் வேலை திட்டப் பணியில் முழுமையான ஊதியம் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதும் அவசியமாகியிருக்கிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளவர்களில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் சிலருக்கு சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்யும் வகையில்  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக ஆன்லைன் பதிவின்போது முறையாக இணைக்கப்படாத ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான நகல் போன்ற ஆவணங்கள் பெறப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத நபர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றார்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை பெறுவதற்காகவும், புதுப்பிக்கவும் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். அதனால், நீண்ட தூரம் பயணம் செய்தல், பல மணி நேரம் காத்திருந்தல், உதவிக்கு ஒருவரை அழைத்து வருதல், அதனால் ஏற்படும் பயணச்செலவு என பல்வேறு வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே, அந்தந்த ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்து, வட்டார அளவிலான மருத்துவர்களை வரவழைத்து மருத்துவ பரிசோதனை சான்று பெறவும், அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News