சாலைகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-15 01:18 GMT

தேரடி வீதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள்.

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அதிக அளவில் காணப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் கிரிவலப்பாதை, மாட வீதி மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியை நகராட்சி ஆணையாளர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகளவில் தேங்கி காணப்பட்ட குப்பைகளை நகராட்சி ஊழியர்களிடம் அகற்றக்கோரி அவர் அறிவுரை வழங்கினார். அத்துடன் தேரடிவிதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களை சுற்றி அமைக்கப்பட்ட தகர சீட்டுகள் மேல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் அங்கிருந்த தண்ணீர் தொட்டிகள் மேல் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களையும் அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் கிரிவல பாதை மற்றும் மாடவீதிகளில் உள்ள கடைகளில் உள்ள குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என்றும், மீறினால் அவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் கிரிவலப் பாதை முழுவதும் தூய்மையாக வைத்துக்கொள்ள பக்தர்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News