ஏடிஎம்மில் எடுக்காத பணத்தை கணக்கில் பிடித்த ஸ்டேட் வங்கிக்கு அபராதம்

திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் எடுக்காத பணத்தை கணக்கில் பிடித்த ஸ்டேட் வங்கிக்கு அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-28 02:17 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அசுவநாத கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவர் செங்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதற்காக ஏடிஎம் கார்டும் பெற்றுள்ளார்.

கடந்த 30.01.2021 அன்று திருவண்ணாமலை -செங்கம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் தனது ஏடிஎம் கார்டை மாமனாரிடம் கொடுத்து பணம் எடுக்கச் சொல்லி இருக்கிறார்.

முதலில் ரூபாய் 9000, 6000, அடுத்து ரூபாய் 5000, பணம் எடுக்க அவர் முயற்சித்திருக்கிறார். இதில் ரூபாய் 6 ஆயிரம் பணம் ஏடிஎம்மில் இருந்து வரவில்லை. ஆனால் ரூபாய் 6 ஆயிரம் எடுத்ததாக மேற்படி சுதா கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா, செங்கம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் புகார் அளித்தார். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இடம் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு 16.02.2021 அன்று புகார் அளித்தார்.

அதனை பெற்றுக் கொண்ட வங்கி முதன்மை மேலாளர் இரண்டு நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார், ஆனால் அதற்கு பிறகு நடவடிக்கை இல்லாததால் மீண்டும் 27.4.21 அன்று புகார் அளித்துள்ளார். அதன்பிறகு ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கண்டறிந்ததில் ரூபாய் 6000 பெறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் வங்கி தரப்பில் எந்த நடவடிக்கை எடுக்காததால் பதிவு தபால் மூலம் வங்கிக்கு புகார் அனுப்பினார்.

வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தின் தலைவர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள்,  திருவண்ணாமலை பாரத ஸ்டேட் வங்கி , பாதிக்கப்பட்ட சுதா வங்கிக் கணக்கில் தவறாக பிடித்தம் செய்த ரூபாய் 6 ஆயிரத்தை 6% வட்டியுடன் திருப்பி தருவதுடன் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கவும் வழக்கு செலவாக ரூபாய் 5000 அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

Similar News