திருவண்ணாமலை - பழனி இடையே அரசுப் பேருந்து சேவை

திருவண்ணாமலை - பழனி இடையே அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்து பொது மேலாளர் தகவல்

Update: 2024-03-12 01:28 GMT

அண்ணாமலையார் கோவில் - கோப்புப்படம்

நினைத்தாலே முக்தி தரும் அற்புத ஸ்தலமான திரு அண்ணாமலை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை வீற்றிருக்கக் கூடிய அருணாச்சலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் ஆகும்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.

தற்பொழுது பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும் திருவண்ணாமலையில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு பேருந்து சேவைகள் துவக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவண்ணாமலை பழனி இடையிலான வழித்தடத்தில் நேரடி சேவை தற்போது துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து திருவண்ணாமலைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது. பழனியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூா் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் மறுமாா்க்கத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு பழனி வந்தடைகிறது. இந்த பேருந்துக்கான கட்டணம் ரூ.350ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்களும், பக்தா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News