மது பாட்டில்கள் பறிமுதல், பறக்கும் படையினர் அதிரடி சோதனை

திருவண்ணாமலையில் பறக்கும் படையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-17 02:46 GMT

பறக்கும் படையினர் பறிமுதல் செய்த மது பாட்டில்கள் 

திருவண்ணாமலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், வாகனத்தில் கொண்டுசென்ற 99 மதுபாட்டில்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் ஆவணமின்றி வைத்திருந்த ரூபாய் 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க, 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை- வேலூர் சாலையில் இனாம்காரியந்தல் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற வாகனத்தில் ஈடுபட்டிருந்தபோது, வாழ்விடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற 99 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, அவற்றை திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி முன்னிலையில் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு, ரூபாய் 13,780 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொலைபேசி மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்து 850 ஐ பறிமுதல் செய்தனர். கடன் வழங்குவதற்காக வங்கியில் இருந்து முறையாக கொண்டுவந்து வைத்திருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், சோதனையின்போது உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்வதாகவும், உரிய ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளித்து, திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை, திருவண்ணாமலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News