அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: திருவண்ணாமலை எம்பி

தன் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாதுரை எம்.பி ஆவேசமாக கூறினார்

Update: 2023-05-23 04:15 GMT

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை - பைல் படம்

கிரிவலப் பாதை அகலப்படுத்தும் பணியினை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, திருவண்ணாமலை கிரிவலப் பாதையை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

லட்சக்கணக்கான ஆன்மீக பக்தர்கள் வந்து செல்லும் இந்த கிரிவலப் பாதையை மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவின்படி பொதுப்பணித்துறை அமைச்சர் திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையை பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பான முறையில் திருவண்ணாமலை நகரில் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

அந்த திட்டங்களில் வேண்டுமென்று உள்நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. சாலை விரிவாக்கப் பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், இங்கு எடுக்கப்படும் மண் விற்பனை செய்யப்படுவதாகவும் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

கிரிவலப் பாதையில் அகலப்படுத்தும் பணியின் போது மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அதை நாடாளுமன்ற உறுப்பினர் செய்வதாகவும் கீழ்த்தரமான செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர்.

இந்தப் பணி நெடுஞ்சாலைத்துறை தர கட்டுப்பாட்டு அலுவலர்களால் ஒவ்வொரு முறையும் சோதித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆன்மீக மண், இந்த மண்ணை விற்கும் எண்ணம் யாருக்கும் வராது, சிவன் சொத்து குல நாசம், எந்த ஒப்பந்ததாரராக இருந்தாலும் ஆன்மீக மக்களுக்கு செய்யக்கூடிய பணியை ஒரு சேவையாக தான் செய்வார்.

இந்தப் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் அதாவது நான் செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசு ஒப்பந்த பணியையும் நாடாளுமன்ற உறுப்பினரோ, உள்ளாட்சி உறுப்பினர் கூட செய்ய முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள்தான் பணியை மேற்கொள்ள முடியும்

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு உள்நோக்கத்தோடு கூறப்பட்ட குற்றச்சாட்டு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எங்களுக்கு நல்ல வழி காட்டுதலை கூறியுள்ளனர் ,அதன்படி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் பொறுப்பினை நேர்மையான முறையில் நான் செயல்படுத்தி வருகிறேன்.

என் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாத காரணத்தால் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News