பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2022-12-08 00:19 GMT

சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி .

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

நேற்று பவுர்ணமியையொட்டி பக்தர்கள் இன்று அதிகாலை வரை விடிய விடிய கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் திருவண்ணாமலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.35 மணியளவில் தொடங்கியது. இதனால் பவுர்ணமியையொட்டியும் நேற்று 2-ம் நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் கோவிலை சுற்றியும், கிரிவலப்பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தெப்பல் உற்சவம்

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருகில் அய்யங்குளத் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது.

முதல் நாள் விழாவான நேற்று சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகரரை வைத்து 3 முறை வலம் வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

மகா தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி இரவு முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவல சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பாடாத வகையில் கிரிவலப்பாதை உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டனர்.

இதனால் கிரிவலப்பாதை மிகவும் தூய்மையாக காணப்பட்டது. கிரிவலம் சென்ற பக்தர்கள் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News