கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் கர்நாடக ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் இருந்து வந்த கர்நாடக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-18 12:04 GMT

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். கோரமண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி விமலா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுநாத் கடந்த 14-ந் தேதி அவரது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வதற்காக வந்துள்ளார்.

பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினர். மஞ்சுநாத்துக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு காயம் இருந்து வருவதால், அவரால் வெகு தூரம் நடக்க முடியாது, எனத் தெரிகிறது. இதனால் கடந்த 16-ந் தேதி மஞ்சுநாத்தை அவரது நண்பர்கள் அறையில் விட்டு விட்டு அவர்கள் கிரிவலம் செல்ல சென்றுள்ளனர்.

இதையடுத்து மஞ்சுநாத் அவரது மனைவிக்கு செல்போனில் பேசி தன்னால் கிரிவலம் செல்ல முடியவில்லையே, என்று வருத்ததுடன் பேசி உள்ளார். பின்னர் அவரது செல்போன் 'ஸ்ட்ச் ஆப்' ஆகியது. அவரது செல்போன் எண்ணுக்கு விமலா பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்கவில்லை. கிரிவலம் சென்று விட்டு விடுதிக்கு வந்த அவரின் நண்பர்கள், அறையில் மஞ்சுநாத் இல்லாததால் அவரை பல இடத்தில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் காணவில்லை.

இதற்கிடைேய, நேற்று இரவு ஏந்தல் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மஞ்சுநாத் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக திருவண்ணாமலை கிழக்குப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் விஷத்தைக் குடித்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார், அவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.    திருவண்ணாமலைக்கு வந்த விமலா, தனது கணவரின் உடலை பார்த்து கதறினார். விமலா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News