மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள்

திருவண்ணாமலையில் நடைபெற மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-04 06:34 GMT

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வணங்கிய பேரவை துணை தலைவர் பிச்சாண்டி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள்  நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக 10, 14, 16, 18, 20 வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு 50 மீட்டரில் இருந்து 5 ஆயிரம் மீட்டர் வரை பல்வேறு ஓட்டப்பந்தயங்களும், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், மாணவிகளுக்கு 50 மீட்டரில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் வரை பல்வேறு ஓட்டப் பந்தயங்களும், தடை ஓட்டம், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது. 

இதில் மாணவ, மாணவிகள் 2 தனிநபர் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தடகள சங்கத்தலைவர் கம்பன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தடகள போட்டிகளை தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், தி.மு.க.நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தடகள சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News