ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா: அமைச்சா்கள் பங்கேற்பு

வேங்கிக்கால் ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2023-05-13 00:58 GMT

நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.  அமைச்சா் எ.வ.வேலு,  அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தனா்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்களுக்கு 11 புதிய வாகனங்கள், பல்வேறு துறைகள் சாா்பில் 6,779 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

விழாவில் அமைச்சா் எ.வ.வேலு பேசுகையில், தமிழக அரசின் 2 ஆண்டு ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது

எனக்கு முன்பு பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அதிகாரிகள், பேசிய நேரத்தை விட நாங்கள் கூடுதலாக பேசினாலும் இந்த ஆட்சிக்கு பெருமை இல்லை, எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான்,  அதிகாரிகளே பாராட்டி பேசினால் தான் ஆட்சிக்கும் எங்களுக்கும் பெருமை.

தற்பொழுது அதிகாரிகளும் பொதுமக்களும் இந்த ஆட்சியை மிகவும் பாராட்டி பேசுகிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

ஒரு திட்டத்தை முன் வைக்கும் போது இந்த திட்டத்தை தீட்டுவதால் ஆபத்து வந்துவிடுமோ? சட்டப்படி தான் செய்து கொண்டிருக்கிறோமோ? விதிகளுக்கு உட்பட்டு செய்து கொண்டிருக்கிறோமோ? என சில அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற காரணத்தால் கோப்புகளில் தாமதம் ஏற்படுகிறது.  இதை தான் ஆங்கிலத்தில் நெகட்டிவ் அதிகாரிகள் என சொல்வார்கள்.

ஆனால் நமது ஆட்சித் தலைவர் உள்ளிட்ட சில அதிகாரிகள் எந்த காரியம் ஆனாலும் முன்னோக்கி சிந்திப்பார்கள் நமது தலைமைச் செயலாளர் அவர்களும் இப்படி தான். எதையும் முன்னோக்கி சிந்திப்பவர்.

மக்கள் பிரதிநிதிகளோடு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினால் தான் திட்டங்களை மக்களுக்கு சென்றடையும். இதனால்தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம் கொண்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை இந்த திருவண்ணாமலை மாவட்டம் பெற்று இருக்கிறது

அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு வீடு கட்டித் தர இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறினேன். எனது கோரிக்கையை ஏற்று, மறுநாளே இன்று இடத்தைப் பார்க்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்துள்ளார். இதைத்தான் கிராமத்திலே சொல்வார்கள் 'கையிலே காசு, வாயிலே தோசை' என்ற வகையில் இந்த ஆட்சியில் திட்டங்கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்மீகப் பெருமக்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் திராவிடத்தையும் பகுத்தறிவையும் ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடமும் ஆன்மீகமும் நிறைந்தது தான் திராவிட மாடல் ஆட்சி, எனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலைக்கு எந்த காலத்திலும் நடக்காத திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் கிரி, சரவணன் ,ஜோதி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்,  மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News