செய்யாறு: ரூ.4½ லட்சம் குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

செய்யாறில் சரக்கு வேனில் ரகசிய அறைகள் அமைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-04 01:46 GMT

ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு செய்யாறு பகுதியில் வாகனத்தில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து,  அவரது உத்தரவின் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் மற்றும் போலீசார் இணைந்து செய்யாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் இருந்த 3 பேர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனை சோதனை செய்தனர்.  அந்த வேனில் இரண்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு நூதன முறையில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் புதுத் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22), பரத் மோகன் (19), செய்யாறு தாலுகா சந்தைமேடு பகுதியை சேர்ந்த சாதிக் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, ரூ.4½ லட்சம் மதிப்புள்ள 350 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.1¾ லட்சம் ரொக்கம் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News