திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-14 03:10 GMT

பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி

தமிழகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் வாரம்தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், மாவட்ட எஸ்பி காா்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு காவல்துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

இந்த மனுக்கள் அனைத்தும் மடிக்கணினியில் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இதுபோன்ற முகாம் நடத்தப்படுவது பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தாமல் இருந்தது. இந்த நிலையில், சில வாரங்களாக இந்த முகாமுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த குறைதீா் முகாமில், மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பணத்தை மீட்டுத்தர வேண்டும் எஸ்பி அலுவலகத்தில் முகவர்கள் புகார் மனு.

செய்யாறு தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை பறிகொடுத்த முகவர்கள், திருவண்ணாமலையில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

செய்யாறு பகுதியில் செயல்பட்டு வந்த ஏபிஆர் எனும் தனியார் நிதி நிறுவனம், பல்வேறு கவர்ச்சிகரமான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிவித்தது. அதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் பணத்தை சேமித்தனர். மேலும், தீபாவளி, பொங்கல் சேமிப்பு திட்டங்களில், ஒருசில ஆண்டுகள் முறையாக பரிசு பொருட்களை வழங்கியதால், பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, அதிக அளவில் சேமிப்பு திட்டத்தில் சேர தொடங்கினர்.

இந்த நிதி நிறுவனம் செய்யாறு மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் கிளைகளை அமைத்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துள்ளது. சுமார் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இந்நிலையில், திடீரென இந்த நிறுவனம் தனது அலுவலகத்தை மூடிவிட்டது. மேலும், அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். அதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தை சூறையாடினர். அதன்தொடர்ச்சியாக, நிதி நிறுவனத்தை நடத்திய அல்தாப் என்பவரை காவல்துறையினர்  கைது செய்தனர். ஆனாலும், பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை மீட்க முடியவில்லை.

எனவே, தனியார் நிதி நிறுவனத்தில் முகவர்களாக செயல்பட்டு பணத்தை பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொடுத்தவர்கள் தற்போது நெருக்கடியில் சிக்கி உள்ளனர். பணத்தை பறிகொடுத்த மக்கள், முகவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றனர்.

எனவே, நிதி நிறுவனத்திடம் பணத்தை பறிகொடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News