சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்கார வழக்கில், தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.

Update: 2023-05-31 01:27 GMT

சிறுமி பலாத்காரம் செய்த  தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது. (கோப்பு படம்)

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி வயது 46. இவர் சைக்கிளில் வேர்க்கடலை, மாங்காய், கொய்யாக்காய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளிடம் உணவுப் பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார். ஆனால் சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறவே பெற்றோர்கள் இதுதொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், வீராசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி பார்த்தசாரதி விசாரணை நடத்தி, தீர்ப்பு கூறினார். அதில், வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

Similar News