மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை

திருவண்ணாமலை அருகே வேட்டை கும்பலிடம் மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

Update: 2022-04-09 15:58 GMT

வேட்டை கும்பலிடம் மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு வனத்துறையினர் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவண்ணா மலையையையொட்டி உள்ள வனப்பகுதிகலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.அவைகளைப் பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நரிக்குறவர்கள் சிலர் ரகசியமாக வனப்பகுதிக்குள் சென்று மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலை தேடி வந்தனர்.

இந்தநிலையில்  திருவண்ணாமலை வேலூர் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு சிறுவனை மடக்கி வனச்சரகர் சீனிவாசன்-விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்தச் சிறுவன் 5 கிலோ மான் கறியை வைத்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் கொண்டம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நரிக்குறவர்களுடன் தொடர்பு வைத்து அவர்கள் வேட்டையாடி வரும் மான்கறியை வாங்கி விற்பனை செய்து வந்ததும், பிடிபட்ட சிறுவன் கார்த்திகேயனின் மகன் என்பதும் தெரியவந்தது.

சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் கொண்டம் பகுதிக்கு சென்று வனத்துறையினர் மான் வேட்டையாடும் கும்பலை பிடிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

பின்னர் பிடிபட்ட சிறுவனை மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மான் கறி வாங்கிய குற்றத்திற்காக ரூ 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News