புயல் பாதித்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்

Update: 2022-12-15 02:45 GMT

குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. மாவட்ட விநியோக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சவீதா, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமு வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் வாழை, நெல் என பல்வேறு வகையான பயிா்கள் சேதமடைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

மழை காரணமாக வீடிழந்தவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயல் மழையால் கிராமப்புறச் சாலைகள் பாழடைந்தும், குண்டும் குழியுமாகவும் உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சதுப்பேரி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் அகற்றப்பட்டு புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டவேண்டும். மழை காரணமாக கிராமப்புறங்களில் கொசு அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. எனவே கிராமங்கள் தோறும் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்

வேளாண்மைத் துறை சாா்பில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு விலையில்லாமல் விதை நெல் வழங்க வேண்டும்.

தற்போது அறுவடைக்கு வரும் சம்பா சாகுபடி நெல்லை தாமதமின்றி உரிய விலைக்கு கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்டத்தில் துறை அலுவலா்கள், விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News