கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

Update: 2024-04-22 02:18 GMT

கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 23 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23 ம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, 24 ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, 23 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெளா்ணமிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமியாகும். எனவே 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, சித்ரா பவுா்ணமி நாளில்தான் அதிகப்படியான பக்தா்கள் வருவது வழக்கம்.  மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம், நகராட்சி, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சித்ரா பெளா்ணமி கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு இடையூறாக கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கிரிவலப் பாதையின் நடைபாதையில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக் கடைகள், தள்ளுவண்டிகள், கடைகள் முன் போடப்பட்டுள்ள தகர கொட்டகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை  நேற்று காலை முதல் மாலை வரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணி இன்றும் தொடரும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Similar News