பவுர்ணமியையொட்டி விடிய, விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

Update: 2023-01-07 00:47 GMT

நடராஜருக்கு தீப மை இடப்பட்டது.

திருவண்ணாமலையில்  பவுர்ணமி,   உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா , ஆருத்ரா தரிசன விழா என அண்ணாமலையார் கோயிலில் ஒரே தேதியில் மூன்று திருவிழாக்கள் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.  மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.26 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி  நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணி வரை இருந்ததால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த முக்கிய திருவிழாக்களில் ஒன்று உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்று விழா. தமிழ் மாதங்களில்ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணியகாலம் என்றும் அழைப்பார்கள்.

அதுமட்டுமின்றி  அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சந்நதியில் உள்ள தங்கக் கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரம் அருகே விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் திரளாக கூடியிருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என முழகமிட்டு அண்ணாமலையார் சந்நதியில் உள்ள 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடைபெற்றது.

இதனையடுத்து 10 ஆம் நாளான தை மாதம் முதல் தேதி ஜனவரி 15 ஆம் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரியோடு இவ்விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா தரிசன விழா

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு கோயிலின் நான்காம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து, சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது 2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதத்தை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு கோயில் சிவாச்சாரியாா்கள் வைத்து மகா தீபாராதனையைக் காண்பித்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Tags:    

Similar News