திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம்: உணவு பாதுகாப்பு துறை

சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்பனையாகும் உணவுகளை சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது

Update: 2022-04-16 05:00 GMT

மத்திய பஸ் நிலையம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சித்ரா பௌர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தரமான, சுத்தமான, சுகாதாரமான உணவு பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் மற்றும் கிரிவலப்பாதையில் ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி திருவண்ணாமலையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா, சிவபாலன், இளங்கோ, கோவிந்தன் உள்பட சிறப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திறந்தவெளியில் தின்பண்ட பொருட்கள் விற்பனை செய்தவர்கள், உணவு பொருட்களில் காலாவதி தேதி அச்சிடப்படாதவை போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கவர்கள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 12 சிறப்பு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வந்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அலுவலர்கள் அவர்களுடன் இணைந்து 4 குழுக்களாக திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை 250-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. 55 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 40 இடங்களில் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 110-க்கும் மேற்பட்டவர்கள் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் மக்கள் அன்னதானம் பெற்று சாப்பிட வேண்டும்.

அனுமதியின்றி அன்னதானம் வழங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளிலும், கிரிவலம் வரும் பக்தர்களும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்

Tags:    

Similar News