14 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி

உறவுக்கார இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, 14 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Update: 2023-04-20 06:05 GMT

உயர்நீதிமன்றம் கோப்புப்படம் 

உறவுக்கார இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, 14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகள், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவுக்கார இளைஞன் சதீஷ்குமார் தவறாக நடந்து கொண்டதும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியபட்டுள்ள நிலையில், கர்ப்பத்தை தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது மகள் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், தற்போதைய நிலையில் கர்ப்பத்தை சுமக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், மகளின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி தனது தீர்ப்பில், தொடர்ந்து கருவை சுமந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என கருக்கலைப்பு சட்டக் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, 2 வாரங்களில் சிறுமியின் கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.

Tags:    

Similar News