கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் மனு செய்து நிவாரணம் பெறலாம்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-04 02:00 GMT

கலெக்டர் முருகேஷ்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத்தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1,665 மனுக்கள் பெறப்பட்டு 1,366 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 115 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20-ந்தேதிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் அதாவது வருகிற மே மாதம் 18-ந்தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தபட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொன்றாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.எனவே கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன்பெறலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News