அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-04-23 01:30 GMT

உணவு பாதுகாப்பு துறை அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம்,  மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறுகையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி விழா இன்று 23ஆம் தேதி முதல் நாளை வரை நடைபெற உள்ளது. வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் வழங்க இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.  ஒரு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், 12 கண்காணிப்பு குழுக்கள், 22 அலுவலர்களை கொண்டு 160 பிரத்தியேக உடையுடன் தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கும் இடங்களில் பங்கேற்பார்கள்.

அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் அளிக்க அனுமதிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்கப்பட வேண்டும். அன்னதானம் அனுமதி பெறாமல் யாரும் வழங்க கூடாது.

கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர் கொண்டு உணவு சமைத்திட வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது.

அன்னதானம் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் தட்டுக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாததாக வழங்க வேண்டும்.

வாழையிலை, மந்தாரை இலை, அல்லி இலை, தாமரை இலை மற்றும் பாக்கு மட்டைகளில் அன்னதானம் வழங்கலாம். உணவுப் பொருட்கள் தரமானதாகவும் தூய்மையானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் ,மோர் ஆகியவை விநியோகம் செய்யக்கூடாது. காகித கப்பில் வழங்கலாம்.

உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும்.  அன்னதானம் வழங்குவோர் உணவு மேலாண்மை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முறையான வணிகர்களிடத்தில் மட்டுமே பொருட்களை பெற்று இருக்க வேண்டும்.

அன்னதானம் தயாரிக்க எவர்சில்வர் போன்ற துருப்பிடிக்காத பாத்திரங்களைக் கொண்டு உணவு தயாரிக்க வேண்டும். அவ்வாறு சமைத்த உணவினை 3 மணி நேர கால அவகாசத்திற்குள் விநியோகம் செய்திட வேண்டும் . 

கிரிவலம் வரும் பக்தர்கள் உணவை வீணாக்க கூடாது. குப்பைகளில் வீசி எறிய கூடாது .மேலும் வனவிலங்குகளுக்கு கிரிவலப் பாதையில் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை வழங்கவோ அல்லது குப்பைகள் போன்றவற்றை போடாமல் குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும். என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அன்னதானம் வழங்குபவர்களுக்கான அனுமதி ஆணையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை வட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News