பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-11 07:27 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் ஆலோசகர் பத்ராசலம் தலைமை தாங்கினார். 

மாவட்ட தலைவர் எஸ்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பூமிநாதன் வரவேற்றார். பொது செயலாளர் யுவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில், 2019-20-ம் நிதி ஆண்டில் 38 பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி கட்டண சலுகைகளையும், 2020-21 மற்றும் 2021-22 நிதி ஆண்டில் விண்ணப்பித்த அனைத்து பணியாளர்களுக்கும் கல்வி கட்டண சலுகைகளையும் வழங்க வேண்டும். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யும் போது உடல்நிலை மற்றும் குடும்ப சூழலை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச்சங்க பொருளாளர் குப்பன், மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News