அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-24 01:28 GMT

அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற மன்மத தகன நிகழ்ச்சி

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

அந்த வகையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அந்த வகையில் சித்திரை வசந்த உற்ச விழாவிற்கான பந்த கால் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பு 14 ஆம் தேதி அன்று தொடங்கிய வசந்த உற்சவ விழா இன்று 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நிறைவடைய உள்ளது.

வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு விழாவின் 9 ம் நாளான நேற்று முன்தினம் இரவு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள மகிழ மரத்தை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவத்தின் பத்தாவது நாளான நேற்று 23 ஆம் தேதி அன்று ஐயங்குள தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி, மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவன் கோவில்களில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மட்டுமே என்பது சிறப்புக்குரியது.

அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அருணாச்சலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாச்சலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாச்சலேஸ்வரர் முன்பிருந்து சீரிப்பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

இதனைத் தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாச்சலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News