ஊரடங்கு உத்தரவால், மணமக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு.

முன்பதிவு செய்த திருமண ஜோடிகளை அண்ணாமலையார் கோவிலில் உள்ளே அனுமதிக்காததால் மணக்கோலத்துடன் வெளியே காத்திருந்தனர்

Update: 2021-04-25 12:00 GMT

திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியே கூடி நின்ற மணவீட்டார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முகூர்த்த நாள் என்பதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கூடினர். திருமணத்திற்கு முன்பதிவு செய்த மணமக்கள், ஒவ்வொரு தம்பதிகளுடன் 40-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கோவிலின் ராஜகோபுரம் அடைக்கப்பட்டு கோவில் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அனுமதிக்காததால், கோவில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் மணவீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். தம்பதிகள் மணக்கோலத்துடன் கோயில் வாயில் முன்பாக காத்திருந்தனர். இதனிடையே ஒரு சில ஜோடிகள், குறித்த முகூர்த்த நேரத்தில் ராஜகோபுரம் வெளியிலேயே மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பின்னர் கோவில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மணமக்களுடன் பத்து நபர்கள் என அனுமதித்தனர்.

Tags:    

Similar News