மயிலாட்டம் சிலம்பாட்டத்துடன் தொண்டர்கள் புடை சூழ பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்

Update: 2024-03-28 02:09 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இறுதி நாளில் தாரை தப்படையுடன் ஊர்வலமாக வந்து பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் 20 ஆம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி உடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, இன்று 28 ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 30 ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் .பாலசுப்பிரமணியன், ஆகியோருடன் வந்து தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியனிடம் தாக்கல் செய்தாா்.முன்னதாக வேங்கிகால் ஆவின் பண்ணை அருகில் இருந்து 700-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ மயிலாட்டம், சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக அஸ்வத்தாமன் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் ஆட்சியர் அலுவலகம் வந்த அஸ்வத்தாமன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இந்தத் தொகுதியில் பாஜக மாற்று வேட்பாளராக வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஏழுமலை, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் தலைவர் டி.ஆா்.கிஷோா்குமாா், ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா்.

இதில் கோயில் பாதுகாப்பு குழு மாநில தலைவர் வழக்கறிஞர் சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம், அமுமுக மாவட்ட செயலாளர் பரந்தாமன், வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஏழுமலை, பாஜக அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவின் மாநில செயலாளர் கதிரவன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார், பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் ,கூட்டணி கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News