திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்

Update: 2021-12-20 04:44 GMT

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொரோனா ஊரடங்கால் தீபத் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. மேலும், கோயில் மாட வீதிகளில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு ஐந்தாம் பிரகாரத்தில் பக்தர்கள் இல்லாமல் சுவாமி வீதியுலா மட்டும் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாட வீதிகளில் சுவாமி வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நேற்று இரவு எழுந்தருளினார். இன்று அதிகாலை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது, 2,668 அடி உயர அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை நடராஜருக்குச் சாற்றப்பட்டது.

ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பாகச் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் எழுந்தருளியபோது பக்தர்கள் 'அரோகரா' கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, திருமஞ்சனம் கோபுரம் வழியாகப் புறப்பட்டு மாட வீதிகளில் பவனிவந்த நடராஜரைப் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாணிக்கவாசகர் மாட வீதியுலாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News