விநாயகர் சதுர்த்தியின்போது விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை

Update: 2021-09-04 05:08 GMT

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து அமைப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து அமைப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. முருகேஷ் தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அலுவலர்கள் விளக்கமாக தெரிவித்தனர்.

பின்னர் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் கூறியதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 30-ந் தேதி பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்தது. விழா காலங்களில் தான் பல்வேறு தரப்பு வியாபாரிகள் பயன்பெறுவார்கள்.

விநாயகர் சதுர்த்தியை விழாவாக பார்க்காமல் கொரோனா ஊரடங்கினால் போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களின் நிலை மோசமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு கம்பு, சோளம் போன்ற பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களால் விழாவினால் விவசாயிகள் பலர் பயனடைந்து வந்தனர்.

டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலை வைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் இந்து அமைப்பினர் சார்பில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதற்கு பதில் அளித்து ஆட்சியர் பேசும்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முழுமையாக குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை யார் பின்பற்றாமல் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

இக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி. இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News