மகளிர் உரிமைத்தொகை பெற, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-29 07:05 GMT

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு , பைல் படம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.

எனவே தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித் தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம். என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்,

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

திருவண்ணாமலை கோட்ட அளவிலான கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அஞ்சலக சென்னை நகர மண்டல தலைவர் நடராஜன் கலந்து கொண்டு பேசுகையில், அஞ்சல் ஊழியர்கள் அஞ்சல் காப்பீடு பொது மக்களுக்கு வழங்குவதை சமூகத்திற்கு ஆற்றும் சேவையாக கருதி செயல்படுமாறு கேட்டு கொண்டார்.

மேலும் சென்னை கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பிரிவு உதவி இயக்குனர் பாபு கலந்து கொண்டு அஞ்சல் காப்பீட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசினார். முகாமில் திருவண்ணாமலை கோட்டத்தில் ரூ.30 கோடியே 89 லட்சத்திற்கான 1364 புதிய பாலிசிகள் ரூ.36 லட்சத்து 43 ஆயிரத்து 211 பிரீமியத் தொகையுடன் தொடங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

சென்ற நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டு அதிகம் பாலிசிகள் பிடித்தம் செய்த அஞ்சலக ஊழியர்களுக்கும் மற்றும் நேரடி முகவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை அஞ்சலக சென்னை நகர மண்டல தலைவர் நடராஜன் வழங்கினார்

இதில் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் பிரதீபா, கார்த்திகேயன், உட்கோட்ட ஆய்வாளர்கள் சவுடிராஜன், ஜெயபாரதி உள்பட 200-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News