கிரிவலப் பாதையை தூய்மையாக பராமரிக்க 7 குழுக்கள்: அமைச்சர் அறிவிப்பு

Girivalam Tiruvannamalai -திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மையாக பராமரிக்க 7 குழுக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு, தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-10 00:54 GMT

கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம்  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில்  நடைபெற்றது.

Girivalam Tiruvannamalai -திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதற்காக பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமையாகும்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கூறுகையில் பௌர்ணமி அன்று தவிர மற்ற நாட்களிலும் எங்களை போன்றவர்கள் கிரிவலம் வருகின்றோம்.  அப்பகுதிகளில் நடைபாதையில் பலர் படுத்துக் கொண்டும் சிலர் கடைகளை வைத்துக்கொண்டும் இருப்பதால் நடைபாதைகளை உபயோகிக்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர்.

எனவே இரண்டு நாட்கள் பௌர்ணமி அன்று இல்லாமல் மாதம் தோறும் திருவண்ணாமலை பௌர்ணமி என்கின்ற வகையில் கிரிவலப் பாதை மற்றும் நடைபாதையை தூய்மையாகவும் ஆக்கிரமிப்பு இல்லாமலும் வைத்திருக்க வேண்டும்,  எனவே கிரிவலப் பாதை பராமரிப்பு ஒழுங்குபடுத்த வேண்டும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் கிரிவலம் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிரிவலப் பாதையில் உள்ள சாமியார்களை கணக்கெடுத்து முறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் .

மேலும் அவர்கள் தங்குவதற்கு தனி இடங்கள் அமைத்து தர வேண்டும். அந்த இடங்களில் தான் அவர்கள் தங்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் அப்பொழுது தான் கண்ட கண்ட இடங்களில் சாமியார்கள் படுத்துக்கொள்வதும் அவர்களுக்கு என்று தனி இடம் இல்லாத குறையும் போகும்.

தினமும் பல பக்தர்கள் வந்து இங்கு அன்னதானம் செய்கின்றார்கள். அந்த அன்னதானத்தை முறைப்படுத்த வேண்டும். பல இடங்களில் அன்னதானம் செய்வதால் பக்தர்கள் அன்னதானத்தைப் பெற்றுக் கொண்டு கண்ட இடங்களில் போட்டு விட்டு செல்கிறார்கள்.

அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அந்த இடத்தில் அன்னதானம் செய்ய வேண்டும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

எனவே கிரிவலப் பாதை தூய்மை பணிகளுக்கு மற்றும் இந்த பாதையை முறைப்படுத்துவதற்கும் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

14 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்படும். அந்த குழுக்களுக்கான பகுதிகளில் நடைபெறுகிற அன்னதானத்தையும் அந்த குழுக்கள் கண்காணிக்க வேண்டும் அவர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தூய்மை பணிகள் அன்னதானம் செய்தல் போன்றவற்றை அந்த குழு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து செய்து கொள்ளலாம்.

தூய்மையான கிரிவலப் பாதை அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, டிஎஸ்பி சௌந்தர்ராஜன், அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், நெடுஞ்சாலை துறை மண்டல கண்காணிப்பாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர்கள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரண்யா தேவி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்  எ.வ. வே. கம்பன் , முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், தூய்மை அருணை நகர ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News