பகவான் ரமண மஹரிஷியின் 143 வது ஜெயந்தி விழா

ஸ்ரீ ரமண ஆசிரமத்தில் பகவான் ரமண மஹரிஷியின் 143 வது ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-07 09:40 GMT

சிறப்பு அலங்காரத்தில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் தவபூமி என்பார்கள். இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்,  மற்றொருவர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.

பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். 'நான் யார்' என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில் ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார்.

திருவண்ணாமலையே இனி தன் வாசஸ்தலம் என்று முடிவுசெய்துகொண்டார். திருவண்ணாமலையின் அருட் தீபமாகிப் பிரகாசித்தார். முதலில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் தியானம் செய்தார் .  அங்குள்ள பாதாள லிங்கத்தில் பல மாதங்களாக தியானத்தில் இருந்தார்.

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் இவரை அடையாளம் கண்டு இதோ ஒரு பெரிய மகான் இருக்கிறார் , பாருங்கள் என்று பொதுமக்களுக்கு ரமணரை அடையாளம் காட்டினார். பின்னர் விருபாக்சி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண பகவானின் ரமணாசிரமத்தில், ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கிய ஜெயந்தி விழாவில் ரமண பகவான் சிலைக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

சாதுக்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News