திருத்தணி: கொரனோ பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் - எம்எல்ஏ சந்திரன் வலியுறுத்தல்
திருத்தணியில் கொரனோ தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தொற்றை தடுக்க வேண்டும் என திருத்தணி எம்எல்ஏ சந்திரன் வலியுறுத்தினார்.;
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனையடுத்து தொற்று பாதிப்பை குறைக்க ஏதுவாக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி இன்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ. எஸ் சந்திரன் பேசும்போது, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் 27 ஊராட்சிகளில் ப்ளீச்சிங் பவுடர், லைசால், சுண்ணாம்பு போன்ற உபகரணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்கள் கிராமங்களில் குடிநீர் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் கிராமங்களில் அறிவுறுத்த வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். ஒன்றிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக இரவு பகலாக பாடுபட்டும், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே ஒன்றிய அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.