பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் - அமைச்சர் உத்தரவு!
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளாத பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருத்தணியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் வாரியாக இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது பெரும்பாலான பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 15 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சா.மு. நாசர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்,மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக ஆய்வுக் கூட்டத்தில் குற்றம்சாட்டிய அமைச்சர், அத்துறையின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா உடனடியாக பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி ஆரணிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சந்திரன், வி.ஜி. ராஜேந்திரன், வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.