ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்..!

திருவள்ளூர் அருகே சதுரங்கப்பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.;

Update: 2024-08-24 05:45 GMT

ஆதிதிராவிடர் உள்ளிட்ட ஜாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருவள்ளூரில் பழங்குடியினர் மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்டம் வழங்கிய பின் இவ்வாறு தெரிவித்தார்..

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் அருகே சதுரங்கப்பேட்டையில் தொல்குடியினர் வேளாண்மை, மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு 290 பயனாளிகளுக்கு 1.76 கோடி மதிப்பிலான ஆடு, கோழி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் படகுகள், மீன்பிடி வலை, குளிரிட்டும் பெட்டி, மீன் விற்பனை தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பின்னர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்று மீன் பிடி படகுகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழகத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்ற வேண்டும் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் ஜாதிய பெயர்கள் அகற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகள் என பெயரிடப்படும் என்றும் ஜாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், சமூக நலத்துறை வட்டாட்சியர் மதியழகன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News