மயானத்துக்கு செல்ல பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
வேலைகாபுரம் ஊராட்சியில் மயானத்துக்கு முறையான சாலை வசதி கேட்டு பேருந்தை சிறை பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர.
பெரியபாளையம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டம். சாலையோரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை சுடுகாடு அமைத்து தர கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வேளகாபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. இறந்தவர்களின் சடலத்தை நீண்ட தூரம் வயல்வெளி வழியே கொண்டு செல்லும் அவலம் நீடித்து வருகிறது. மேலும் நிலத்தின் உரிமையாளர்களும் தற்போது தங்களது நெற்பயிர்கள் வழியே சடலங்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இதே கிராமத்தை சேர்ந்த 72வயது முதியவர் பழனி என்பவர் உயிரிழந்தார். அவரது சடலத்தை வயல்வெளி வழியே கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிக்கல் நீடித்தது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பல்லாண்டுகளாக நீடித்து வரும் சுடுகாட்டிற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது சாலையோரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
விரைவில் சுடுகாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக வருவாய்த் துறையினர் அப்போது உறுதியளித்தனர். மேலும் தற்காலிகமாக வயல்வெளி வழியே சடலத்தை கொண்டு செல்லவும் நில உரிமையாளரிடம் அனுமதி பெற்று தந்ததால் போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் இறந்தவரின் உடலை வயல்வெளியில் இறங்கி சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.